திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவரது மகன் மதியழகன்(55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சாமி ஊர்வலம் வரும் பொழுது சுவாமியை தூக்கும் சீர்பாதம் என்ற பணியை செய்து வந்துள்ளார். மேலும் திருமணமான இரண்டு மாதங்களிலேயே மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், தனது தாயாருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தாயாரும் இறந்து விட்டதால், தனிமையில் இருந்த மதியழகன் மதுவுக்கு அடிமையாகி விட்டார். மதியழகனை கடந்த 11 ஆம் தேதி பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலை மதியழகன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து, திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது வீட்டின் முன் பகுதியில் மதியழகன் பாசமாக வளர்த்த நாய் ஒன்று காவலர்களையும் பொதுமக்களையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி குறைத்துக் கொண்டே இருந்தது.
உடனடியாக காவல்துறையினர் நாய் பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நாய் பிடிக்கும் ஊழியர்கள் வருவதைக் கண்ட நாய் அங்கிருந்து தப்பி ஓடியது. அதற்குப் பிறகு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அழுகிய நிலையில் இறந்து கிடந்த மதியழகனின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மதியழகனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதியழகன் உடலை எடுக்க விடாமல் செல்லப் பிராணியான நாய் தடுத்து நிறுத்திய சம்பவம், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.