விழுப்புரம், நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நிலத்தின் உரிமையாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு வழி சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னலக்குடி, 80 ஆலங்காடு, தலைச்சங்காடு, ஆக்கூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை இன்னும் முறையாக வழங்கிடவில்லை. அரசின் சந்தை மதிப்பைவிட குறைவாகவே வாங்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் தொகை வழங்க கோரி முறையீடு செய்தனர். கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டம் செய்ய முடிவெடுத்து ஆயத்தமாகினர்.
இந்தச்சூழலில் சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டியும், மேல்முறையீட்டு இறுதி தீர்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதோடு. வருகிற ஆகஸ்ட் 7 தேதி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் நில உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.