Skip to main content

அரசு பள்ளியில் சேரும் போதே பள்ளிக்கு புத்தகம் வழங்கிய மாணவி...

Published on 20/08/2020 | Edited on 21/08/2020

 

Thirumanur

 

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 1963 இல் துவங்கப்பட்ட, 58 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-2020 ஆம் கல்வியாண்டில் 429 மாணவர்கள் பயின்று வந்தனர். 2020-2021 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை திங்கள் கிழமை 17.08.2020 முதல் நடைபெற்று வருகிறது.

 

கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி சுசிகலாவின் மகளான அக்சயா தனது மூன்று வயதிலேயே அரசுப்பள்ளியில் தான் படிப்பேன் என்று உறுதியோடு சொன்னவர். தனது 3 வயதிலேயே பல பள்ளிகளில் இயற்கை வாழ்வியல் குறித்து பாடம் நடத்தியவர். 5 ஆம் வகுப்பு வரை கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயின்று கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் (உறுதியேற்றபடி) மேற்படிப்பையும் துவங்கியுள்ளார். 

 

தற்போது, 6 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கு புத்தகங்களை வழங்கி 6- ஆம் வகுப்பு சேர்ந்ததை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் வெகுவாக பாராட்டினார். மேலும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் அதுவே எனது கனவு என பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூறிய மாணவி அக்சயாவின் கனவு மெய்ப்பட வேண்டும் என வாழ்த்து கூறினார். 

 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் கூறும்போது, “பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கையின்போது அரசு உத்தரவுப்படி புத்தகம் வழங்குவது மரபு. ஆனால் எனது 30 வருட பள்ளிக்கல்வித்துறை அனுபவத்தில் பள்ளி மாணவி ஒருவர் மேல்படிப்பை தொடர வருகின்றபோது புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியது இதுவே முதன்முறை என்றார். இது குறித்து மேலும் கூறுகையில் இதுபோன்ற பள்ளி நலன் சார்ந்தும், பொதுநலன் சார்ந்தும் மாணவர்கள் கிடைப்பது அரிது என்று கூறினார். இதுபோன்ற நல்ல சிந்தனையுள்ள மாணவர்களால் எதிர்காலம் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த மாணவி அக்சயா தனது 3 வயதிலேயே அரசுப்பள்ளியில்தான் படிப்பேன் என சபதம் செய்தவர். எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ள 6 ஆம் வகுப்பு மாணவி அக்சயாவின் உறுதியை மதித்து 58 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிக்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்