போலீஸ் ஸ்டிக்கர், டம்மி வாக்கி டாக்கியுடன் காரில் வலம் வந்து ஆறு மாதமாக போலீஸ்க்கு தண்ணிக் காட்டிய போலி போலீஸை ஒட்டன்சத்திரத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் கொல்லப்பட்டி குமர ராய் புரத்தைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் ஒட்டன்சத்திரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செல்வகணேஷ் நாகப்பட்டினம் திருவெண்காட்டில் ஒரு சுமோ காரை வாங்கி அதில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி நம்பர் பிளேட்டில் ஆங்கிலத்தில் ஜி என ஒட்டி காரில் டம்மி வைர வயர்லெஸ் போன் செட்டை பொருத்தி கொண்டு போலீஸ் தோரணையில் கடந்த ஆறு மாதமாக இந்த காரில் ஒட்டன்சத்திரம் பகுதியில் சென்று வந்துள்ளார்.
இப்படி ஒட்டன்சத்திரம் பகுதியில் அடிக்கடி சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் வாகன தணிக்கை செய்த போது செல்வகணேஷ் வசமாக சிக்கிக் கொண்டார். ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், எஸ்.ஐ. விஜய் தலைமையில் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த செல்வகணேஷ் காரை மடக்கி விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் செல்வ கணேஷ் போலி போலீஸாக ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த காரை பயன்படுத்தி ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளாரா என போலீசார் விசாரித்தும் வருகின்றனர். அதோடு சில பத்திரிக்கை பெயரில் செல்வகணேஷ் நிருபர் என்பதற்கான அடையாள அட்டையை வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.