
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும் கரூர் அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் இன்று (22.07.2021) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூர் ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 20 இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.
சோதனையின் காரணமாக அவரது வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்த சோதனை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.