
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சமூகநல அலுவலர் பூரணம், கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை கரூர் ராமாகவுண்டனூரைச் சேர்ந்த டிரைவர் மயில்ராஜ் (வயது 23) நல்லாம்பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மயில்ராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் சமூகநல அலுவலர் மாரியம்மாள் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடவூர் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். அவரை குளக்காரன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் (வயது 25) கடத்திச் சென்று குளக்காரன்பட்டி மாரியம்மன் கோவிலில் சம்பவத்தன்று திருமணம் செய்து பலமுறை உறவு வைத்துக்கொண்டதாக புகாரில் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அதன்பின் கார்த்திக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.