கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது கோட்டார் ஊராட்சி. இந்தப் பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் பெரும்பாலான மாணவ மாணவிகள், சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான டாக்டர்களும் பயிற்சி டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இங்கு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் ஆண்டனி சுரேஷ். 35 வயது மதிக்கத்தக்க இவர், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் ஆண்டனி சுரேஷ் அதே மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கடந்த 22 ஆம் தேதியன்று ஆண்டனி சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவிகள் போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனத்திற்கு ஆன்லைன் மூலமாகத் தனித்தனியாக இரண்டு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்தப் புகாரில், இதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வைரவன், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த சில காலமாக இங்கு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வைரவன் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவிகளுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த மாணவிகள் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கும் லேப் டெக்னீசியன் வைரவன் மீது போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனத்திற்கு ஆன்லைன் மூலமாகத் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். மேலும், அந்த மனுவில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில், மாணவிகள் அளித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட கோட்டார் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட வைரவன் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே வேளையில், கைது செய்யப்பட்ட வைரவனுக்கு வரும் வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அவர் பாலியல் புகாரில் சிக்கி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.