![Poisoning of public wells; A case against the couple](http://image.nakkheeran.in/cdn/farfuture/MouES0nzHar5xACV9ICX-kqeYsH9jMGWEj74_9jCguo/1674129113/sites/default/files/inline-images/n223024.jpg)
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இறையூர் அய்யனார் கோவிலில் ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு, இரட்டைக் குவளை முறை என பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதேபோல் திருப்பூரில் பொது கிணற்றில் தம்பதியர் இருவர் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் உள்ள ஊர்ப் பொது கிணற்றில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது கிணற்றிலிருந்து மாதிரி நீர் எடுக்கப்பட்டு திருப்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு கிடைக்கும் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.