
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சி, நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுவை ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், மரக்காணம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் லஞ்சமாக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வசூல் செய்கிறார்கள். இந்த வசூல், நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த லஞ்சம் குறித்து கேட்டால் ஊழியர்கள் மிரட்டுகிறார்கள். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை வாங்கிப் படித்த மாவட்ட ஆட்சியர் மோகன், அங்கிருந்து அதிகாரிகளை அழைத்து அந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.