தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலைகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நண்பர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையோர மரத்தடிகளிலும், பாலங்களிலும் அமர்ந்து மது விருந்து நடத்துவது தினசரி காணும் காட்சியாக மாறியுள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் பகுதியில் இரவு நேரத்தில் காரில் வந்த 5 நண்பர்கள் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த அங்கு வந்த ஒரு இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்த 5 பேரிடமும் நெருங்கி பேச்சு கொடுத்து தன்னுடைய பேச்சு திறமையால் அவர்களுக்கு நெருங்கிய நண்பராக மாறிப் போனார். பின்பு புது நண்பருடன் சேர்த்து பழைய நண்பர்களும் தங்களுக்குள் மதுவை பரிமாறிக்கொண்டனர்.
விடிய விடிய மது குடித்த ஆறு பேருக்கும் மறுநாள் காலை பசி ஏற்பட, அனைவரும் செஞ்சி சாலையில் உள்ள ஒரு உணவகத்தின் முன் காரை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றுள்ளனர். சப்பிட்ட பின் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. அதோடு இரவு முழுவதும் அவர்களுடன் மது அருந்திய அந்த புதிய நண்பரையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த 5 பேரும் திண்டிவனம் ரோஷனை காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காரை பறி கொடுத்த நண்பருக்கு திடீர் நண்பராக மாறி காரை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.