மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திப்பதற்காக அவரது இல்லத்தில், பேரறிவாளனும் அவரது தாயாரும் காத்திருந்தனர். வைகோ வரும்வரை அவர்களிடம் பழைய கதைகளை அசை போட்டுக்கொண்டிருந்தார், மதிமுக தலைமைக் கழகச் செயலர் துரை வைகோ. திடீரென கம்பீரமான நடையுடன் வைகோ என்ட்ரி கொடுத்தார். அற்புதம் அம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் எழுந்துநின்று வைகோவுக்கு வணக்கம் செலுத்தினர்.
எல்லோருக்கும் வணக்கம் சொன்ன வைகோ.. மெதுவாக பேரறிவாளன் அருகே வந்து, அவரது கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். சில நிமிடம் பேரறிவாளனை மட்டுமே பார்த்தார். வைகோ, பேரறிவாளனின் கண்களைப் பார்த்தவாறு பேச்சற்று நின்றுகொண்டிருந்தார். பேரறிவாளன் செய்வதறியாது நிற்கிறார். இந்த காட்சி, அங்கிருந்த பலரையும் மவுனத்தில் ஆழ்த்தியது. பிறகு, வைகோ சொன்ன 'மகிழ்ச்சி' எனும் ஒற்றை வார்த்தை, அங்கிருந்த அனைவரையும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தது. தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள்தண்டனைக்கு மாற்றிய ராம்ஜெத் மலானியின் உழைப்பு, அதற்கு முழு பின்புலமாக இருந்த வைகோவின் பங்கு உள்ளிட்டவற்றை மீண்டும் நினைவுபடுத்திய பேரறிவாளன், வைகோவுக்கு நன்றி சொன்னார். 'நேற்றே வருவதாக இருந்தோம்.. முதல்வர் சந்திப்பினால் உங்களைச் சந்திக்க முடியவில்லை' என பேரறிவாளனும் அவரது தாயாரும் வருத்தத்தை தெரிவித்தனர்.
"நான் படுத்துருந்தேன்.. நீங்க வர்றது தெரியாது.. நீங்க வர்றீங்கன்னு சொன்ன அப்புறமா குளிச்சிட்டு வந்தேன்.. அதான் தாமதமாயிட்டு" என வைகோ சொல்ல.. 'அச்சச்சோ.. தொல்லை குடுத்துட்டேனா' என பேரறிவாளன் உருகினார். 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' என வைகோவும் துரை வைகோவும் மகிழ்ச்சியுடன் பேசினர். இதன்பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இருவரும் பரஸ்பரம் நன்றிகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த வைகோவை சந்திக்காமல் மற்ற தலைவர்களை பேரறிவாளன் சந்தித்து வருவதாக, அவர்மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தநிலையில், வைகோ பேரறிவாளன் சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.