கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து மேகமூட்டம் கலைந்து லேசான வெயில் காணப்பட்டது. மீண்டும் மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்து, இரவு நேரத்தில் மீண்டும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் கனமழை பெய்து வந்தது.
மாவட்டத்திற்கு உட்பட்ட நகரப் பகுதி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, வெள்ளியணை, புலியூர், புன்னசத்திரம், பரமத்தி, நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மேலும், மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வந்தது. நேற்று முழுவதும் காலையிலிருந்து இரவு வரையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து லேசான மழை, விட்டுவிட்டு மழை, கனமழை எனப் பெய்ததால் இரவு வேளையில் வேலை முடித்து வீடு திரும்பும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.