மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோடநாடு எஸ்டேட்டின் மேலாளர், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேபோல், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், சென்னையை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை. அந்தப் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தப் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய ரூபாய் 1,600 கோடி சொத்துகள் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துகள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.