கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இன எழுச்சி மாநாடு மண்டல செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார். இம்மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு உள்ளிட்டோர் பேசினார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது:- “இஸ்லாமியர்கள் அரேபியாவிலிருந்தோ... கிருஸ்துவர்கள் இஸ்ரேலிலிருந்தோ வந்தவர்களா…? சாதிய ரீதியான பாகுபாடு காரணமாக மதம் மாறியவர்கள்தானே… இன்றைக்கும் சாதி தீண்டாமை, மொழித்தீண்டாமை நிலவுகிறதே… சமதர்மத்துக்காக நாம் போராடுகின்ற வேளையில் மனுதர்ம ஆட்சியை கொண்டு வர மத்தியில் ஆள்பவர்கள் முயற்சிக்கிறார்கள். தமிழை நீஷபாஷை என்கிறார்களே… நாம் குடமுழுக்கு என்கிறோம், அவர்கள் கும்பாபிஷேகம் என்கிறார்கள். கோயிலுக்குள் தமிழனும் உள்ளே போக முடியவில்லை, தமிழும் உள்ளே போக முடியவில்லை. நீதிமன்றத்திலும் தமிழ் நுழையக்கூடாது என்கிறார்கள்.
இருமொழிக்கொள்கை தான் எங்களின் கொள்கை என அன்று அண்ணா சொன்னார். ஆனால் இன்றைக்கு இந்தியை திணிக்க முயல்கிறார்கள், சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிறார்கள். ஆனால் அண்ணா சொன்னது போல அண்ணா பெயரில் கட்சி நடத்தி இப்போது ஆட்சி நடத்துபவர்களால் ஏன் சொல்ல முடியவில்லை? கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால்தான் நீட், நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளை ஒழிக்க முடியும். இன்றைக்கு நாம் ஒருங்கிணைந்து போராடவில்லை என்றால் வர்ணாசிரம மனுதர்ம ஆட்சிதான் நடக்கும்” என்றார்.
முன்னதாக குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட இன எழுச்சி பேரணி நடைபெற்றது. அதில் இளைஞர்கள், சிறுவர்களின் வீர விளையாட்டுகள் இடம் பெற்றது. குடியுரிமை திருத்த சட்டம், நீட்- நெக்ஸ்ட் தேர்வு உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.