நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டிச்சாமிக்கும், ராதாதேவிக்கும் வரும் 21 ஆம் தேதி நத்தத்தில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வர இருக்கிறார். இதற்காக திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர்களான நாகராஜன், பிலால்உசேன், மார்கிரேட் மேரி மற்றும் பொருளாளர் சத்தியமூர்த்தி, அவைத்தலைவர் காமாட்சி, செயற்குழு உறுப்பினரும், அமைச்சரின் பி.ஏ. தண்டபாணி மற்றும் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதிஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் திண்டுக்கல் மாநகர செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் உள்பட கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பலனோர் கலந்து கொண்டனர்.
இதில் ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, “20 ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து வரும் துணை முதல்வரை திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரில் வரவேற்க வேண்டும். அதற்காக கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக வந்து துணை முதல்வராக ஆனவுடன் முதன் முதலாக திண்டுக்கல் வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். அதனால் மாவட்டம், நகரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் துணை முதல்வர் தங்கிவிட்டு மறுநாள் காலையில் நத்தத்தில் நடக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். அதுபோல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நமது தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதலமைச்சராக இப்போது இருந்தே கட்சி பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.