பானி பூரி என்ற வடநாட்டு உணவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் அடிமையாகிக் கிடக்கின்றனர். காரமும், புளிப்பும் நிறைந்த இந்த நொறுக்குத் தீனி வேண்டாமென்போர் வெகுசிலரே. மலிவு விலையிலும், எளிதில் கிடைக்கக் கூடியதுமாக இருக்கும் இதை பலரும் விரும்புவதற்கு ஒரு முக்கியப் பொருள் சேர்க்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வந்த புகார் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வந்த அந்த புகாரில், பானி பூரியில் சுவையூட்டுவதற்காகவும், அடிக்கடி அதை வேண்டுமென்று கேட்பதற்காகவும் அதில் பான் மசாலா எனப்படும் போதைப்பொருள் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பெரும்பாலான கடைகளில் உள்ள பானி பூரிக்களில் பான் மசாலாவின் மணமும், சுவையும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பானி பூரி கடைகளில் கடுமையான சோதனையை நடத்தியுள்ளனர். பானி பூரி, புதினா நீர், பூரி பொரிக்க பயன்படும் எண்ணெயின் தரம் என பலவற்றையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த புகார் வந்ததை உணவுப் பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலும் இதுபோல பிரச்சனைகள் உணரப்பட்டால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.