வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியில் பெண்களுக்கான தனி நூலகம் வேண்டும் என அப்பகுதி பெண்கள், மாணவிகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், அப்பகுதியில் இயங்கி வரும் கிளை நூலகம் வளாகத்தில் சட்டமன்ற நிதியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டு பெண்களுக்கான நூலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பெண்கள் அச்சமின்றி நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாவட்டத்தில் முதல் முறையாக பெண்களுக்கான நூலகத்தை கட்டி திறக்கப்பட்டுள்ளது. மேலும் வளையம்பட்டில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதனை இளைஞர்களுக்காக அரசிடம் முறையாக அனுமதி பெற்று விளையாட்டு திடல் அமைத்து தரப்படும் என்றார்.