வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிபேட்டை ஆற்றங்கரை பகுதியில் ஆகஸ்ட் 12ந்தேதி காலைக்கடன் ஒதுங்க சென்ற பொதுமக்கள் அங்கங்கே காகங்கள் இறந்துவிழுந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காகங்களை வேட்டையாடும் குருவிக்காரர்களும், குறவர்களும் இப்போது குறைந்துவிட்டனர் அப்படியிருக்க இந்த வேலையை யார் செய்துயிருப்பார்கள் என பார்த்தபோது அந்த காகங்கள் அருகே சாராய பாக்கெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர்.
காகங்கள் தாகத்துக்கு தண்ணீர் பாக்கெட் என நினைத்து சாராய பாக்கெட்களை கொத்தி குடிக்க அப்படியே மயங்கி கீழே விழுந்து இறந்துயிருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தனர்.
போடிப்பேட்டை ஆற்றங்கரை பகுதியில் கள்ளச்சாராய கும்பல் பாக்கெட் சாராயத்தை பகல், இரவு என விற்பனை செய்கிறது. சாராயத்தை வாங்கும் குடிமகன்கள் குடித்தது போக மீதியுள்ள சாராய பாக்கெட்டை அப்படியே போட்டுவிட்டு செல்வதால் அந்த பாக்கெட் சாராயத்தை குடித்து காகங்கள் இறந்துள்ளன என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பாக்கெட் சாராயம் மட்டும்மல்ல இங்கு கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளும் பறவைகள் இறப்புக்கு காரணமாகிறது என்கிறார்கள்.
Published on 13/08/2018 | Edited on 13/08/2018