காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு அநீதி இழைக்குமானால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாகவே ராஜினாமா செய்ய வேண்டும்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. முன்னதாக விருத்தாசலம் நீதிமன்ற வாயில் முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தி.க, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக சென்று உழவர் சந்தை முன்பாக உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது கால தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கங்கள் எழுப்பினர்.
பின்னர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் வீரமணி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் அமைக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அதற்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கிறது. மத்திய அரசும் கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து காலதாமதம் செய்கிறது. உடனடியாக தமிழக அரசு அனைத்துக்கட்சிகள். விவசாய அமைப்புகளை அழைத்துப்பேசி, அடுத்த நாள் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும். மக்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்” என்றார்.
மேலும், “ காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்பது குறித்து கேட்டதற்கு, ”நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்யலாம். அதுபோல் தமிழ் நாட்டை ஏமாற்ற நினைக்கும் மத்திய அரசின் அலுவலகங்கள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமா… எனும் நினைக்குமளவுக்கு மக்களின் போராட்டம் வலுப்பெற வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் தி.க செயலவைத்தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாவட்டத்தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.