இந்தியாவில் அடுத்த ஆண்டு முக்கியமான சில மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற்ற உள்ள உ.பி, பஞ்சாப், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியினர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் இலவசமாக தருவோம் என்ற உத்தரவாதத்தையும் தருகிறார்கள். இந்நிலையில், ஆளும் பாஜகவுக்குப் போட்டியாக மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்த தயாராகிவிட்டது. இதன் ஒரு பகுதியாக அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ராவை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். இந்நிலையில் அவர், கோவாவில் தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் மாதம்தோறும் குடும்பம் ஒன்றுக்கு 5 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "கோவாவில் 3.5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு 5 ஆயிரம் வழங்கினால் மாதம் 175 கோடி செலவாகும், அதுவே வருடத்துக்கு 2,100 கோடி ஆகும். கடந்த வருடம் கோவாவின் கடன் நிலுவை தொகை 23,473 கோடி, இது சிறிய தொகைதான். டிஎம்சியின் பொருளாதாரக் கணக்கு நோபல் பரிசுக்கு உகந்ததாக இருக்கிறது. கோவாவைக் கடவுள் காப்பாற்றட்டும் அல்லது கடவுளைக் கோவா காப்பாற்றட்டும்" என்று கூறியுள்ளார். இதற்கிடையே, “நாங்கள் கூறியதுபோல பணம் வழங்குவோம்” என்று மீண்டும் மஹூவா மொய்த்ரா உறுதியளித்துள்ளார்.