வாக்குப்பதிவுக்காக இன்னும் ஒரு இரவு மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் பல கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. பணம் கொடுப்பது வெளிப்படையாக தெரிந்தாலும் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே சோதனைக்கு செல்கிறார்கள்.
ஆனால் எதிர்கட்சி வேட்பாளர்கள் என்றால் சோதனை மேல் சோதனை என்பது தொடர்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் அறந்தாங்கி நகரில் 7 வது வார்டு அ.தி.மு.க வட்டச் செயலாளர் சோபியா பார்த்திபன் அலுவலகத்திற்கு இன்று மதியம் 10 க்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சென்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சுமார் அரைமணி நேர சோதனைக்கு பிறகு எதுவும் இல்லை. தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்று பறக்கும் படை அதிகாரிகள் சென்றாலும் அலுவலக வாசலில் 2 போலிசாரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த 2 போலிசாரும் சென்றுவிட்டனர்.
இது தி.மு.க வினரின் சதி தகவலால் நடந்த சோதனை என்று அ.தி.மு.க வட்டாரத்தில் குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். ஆனால் தி.மு.க தரப்பிலோ.. இப்ப வீண் வதந்திகளை நாங்கள் பரப்ப வேண்டியதில்லை. பணம் எங்கே வைத்து பட்டுவாடா செய்கிறார்கள் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கே தெரியும். ஆனால் அந்த இடங்களுக்கு செல்லாமல் கண்துடைப்பிற்காக பார்த்திபன் அலுவலகத்தில் சோதனை செய்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சென்றிருக்கிறார்கள் என்கின்றனர்.