ஒரு லட்சத்து 799 வெளிமாநிலத் தொழிலாளர்கள், அரசு செலவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலகராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் முன்பு, அவர்கள் தங்குவதற்கு சமூக நலக்கூட விவரங்களை அறிவிக்கவேண்டும். வெளியூர் செல்வதற்கான ரயில் விவரங்களை இணையதளத்தில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாரயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாரயண், இதற்காக நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டு, மற்ற மாநில அதிகாரிகளுடன் பேசி, வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக ஒருங்கிணைத்து வருவதாக தெரிவித்தார். இந்தப் பணி சுமுகமாக நடைபெறுகிறது. பதிவு பெற்ற சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களில் ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் தமிழக அரசின் செலவில் அனுபப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சார்பில் இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில மாநிலங்கள் அனுமதிக்க மறுக்கின்றன. மாநில அரசுகள் தயாராக இருந்தால், சிறப்பு ரயில்களை இயக்கத் தயார் என்று குறிப்பிட்டார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்ப தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு, மத்திய-மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வரும் 26-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.