Skip to main content

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தும் இளைஞர்; திருச்சியில் பயங்கரம்!

Published on 17/12/2024 | Edited on 17/12/2024
oung man with a split tongue and a tattoo

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட, சிந்தாமணி கடைவீதி வெனிஸ் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி வருகிறார்.

உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பது போல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் விளம்பரம் செய்து வந்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய நாக்கு பிளவுபடுத்தி  அதனை தன்னுடைய  இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனைப் பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுக்கான நாக்கை பிளவுபடுத்தி கொண்டுள்ளனர். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் இந்த செய்முறையை ட்ரெண்டிற்காக பலர் செய்து வந்த நிலையில் திருச்சியில் அதைச் செய்வதாக ஹரிஹரன் விளம்பரம் செய்துள்ளார்.  

இந்த நிலையில், இது குறித்து புகார் வந்ததையடுத்து திருச்சி மாநகர போலீசார் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முழுமையாக ஆய்வு செய்து அது குறித்து  விசாரணை செய்தனர். அதில் அவர் உரிய அனுமதி இன்றி நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து ஹரிஹரன் மற்றும் அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சியினர் சீல் வைத்தனர். 

கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும் அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்