கொரோனா நிவாரண நிதிக்காக மத்திய மாநில அரசுகளுக்கு முக்கியப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள், வியாபாரிகள் மற்றும் ஆளும் கட்சி, எதிர் கட்சி எம்.பி.கள், எம்.எல்.ஏ.கள் எல்லாம் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
அதுபோல் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மூத்த மகனான ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனது நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயைக் கொரோனா நிவாரண நிதிக்காக கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஒபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் தீவிர ஆன்மிகவாதி. மாவட்டத்தில் நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை கோயில் குளங்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து கொண்டும்,அதேபோல் ஏழை எளிய மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் எடுத்து வருகிறார்.
அப்படிப்பட்ட ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப் இந்த கொரோனா வைரசிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தனது சொந்த பணத்தில் ஒரு கோடி ரூபாயை (செக்) கொரோனா நிதிக்காக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் கொடுத்திருக்கிறார்.அதைக்கண்டு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் கூட ஜெயபிரதீப்பை பாராட்டி வருகிறார்கள்.