திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, திருச்சி மாவட்ட (எஸ் பி) காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
அந்த வகையில் இரு மாவட்ட மற்றும் மாநகர போலீசார் இணைந்து "ஆபரசேன் அகழி' என்ற பெயரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையில் மொத்தம் 825 போலீசார், சரித்திர பதிவு குற்றவாளிகள் மட்டுமின்றி, நில அபகரிப்பு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 18,92,750 ரூபாய் ரொக்க பணமும், 67 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகை 37,52,000 ரூபாய் மதிப்புடையது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.