ஆர்ப்பாட்டத்தில் கோஷத்தை ஆளுக்கொருவிதமாக மாற்றி மாற்றி கோஷம் போட்டு தங்களுக்கிடையே உள்ள கோடி மோதலை, உட்கட்சி பிரச்சனையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, காமெடியாகியிருக்கின்றது ராமநாதபுர மாவட்ட தி.மு.க..
ஊழல் அரசே பதவி விலகு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.சார்பில் தமிழகமெங்கும் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது. இதனின் ஒரு பகுதியாக ராமநாதபுர மாவட்டத்திலும் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் மாவட்ட தி.மு.க.வினர். பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல், நல்ல சேதுபதி, பெருநாழி போஸ் என குறிப்பிடத்தக்கோர்கள் ஓரணியாகத் திரண்டு புதிய மா. பொறுப்பாளர் முத்துராமலிங்கம் பக்கம் நின்று கொள்ள, 35 வருடமாக கோலோச்சியமுன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த திவாகரன் ஆகியோர்கள் மற்றொரு அணியாகவும் ஆட்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் சேர்ந்தனர். மேடைக்கு சுப.தங்கவேலனை கூப்பிட்டு பார்த்தும் அவர் இம்மியளவு கூட அசைந்துக் கொடுக்காததால் முறைப்படி ஆர்ப்பாட்டம் துவங்கியது.
ஊழல் அரசே ஒதுங்கு என மா.பொறுப்பாளர் தரப்பு கோஷமிட, அதற்கு ஒத்து ஒற்றுமையாக கோஷமிடாமல், குட்கா வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்.!! என வேறொரு கோஷத்தை முன்வைத்தது சு.ப.தங்கவேலன் டீம்..! அதற்கடுத்து கலைஞர் புகழ் வாழ்க..! என ஒரு தரப்பு கோஷமிட, மற்றொரு தரப்போ ஸ்டாலின் வாழ்க.!! என்றது. இறுதி வரை ஏட்டிக்குப் போட்டியாகவே கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தது மாவட்ட தி.மு.க. இதனையே புகாராக மாற்றி தலைமை கொண்டு செல்ல மா.பொறுப்பாளர் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல்.