ஆதார் அட்டையைக் காட்டினால் மட்டுமே உரம் விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் கிடுக்கிப் பிடி போடுவதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் உரத்தை வாங்காமால் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திருவாடனை மற்றும் ஆர். எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு பெய்த மழையால், தரிசாக கிடந்த பூமியில் மீண்டும் விவசாயம் பார்க்கும் எண்ணத்துடன் ஆங்காங்கே விவசாய வேலைகளை செய்து வருகின்றனர் திருவாடனை, ஆர். எஸ். மங்கலம் தாலுகா விவசாயிகள். கூலிக்கு ஆள் இல்லாமல் தள்ளாடும் விவசாயிகளுக்கு அடுத்தக்கட்ட சோதனையே, ஆதார் அட்டையைக் காட்டினால் மட்டுமே உரம் விற்பனை செய்யப்படும் என விதிமுறை. "உரம் வாங்கனும்னு இங்க வந்தால் ஆதார் அட்டையைக் கொண்டு வாங்க உரம் தார்றேங்க.! அடுத்த தடவை வரும்போது ஆதார் அட்டையைக் கொண்டு காண்பிக்கின்றோம் என்றாலும் உரங்களை எங்களுக்கு விற்பதில்லை. எங்க கிராமத்திலிருந்து நேரத்திற்கு போக்குவரத்து வசதி இருந்தால் இது நடக்குமா..? மற்றவர்களிடம் ஆதார் அட்டையைக் கொடுத்துவிட்டாலும் உரம் கிடைப்பதில்லை. நேரடியாக வரனும் என்கிறாங்க.!" என தாங்கள் உரத்திற்காக அவதிப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட விவசாயதுறை இயக்குநரகமோ, " கடந்த 4 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தற்பொழுது வரை போதுமான மழை பெற்றுள்ளது இப்பகுதி. நெற்பயிர்களுக்கான உரம் அரசிடம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. உரம் வாங்க வரும் விவசாயிகள் கண்டிப்பாக ஆதார் அட்டை. கொண்டுவந்து உரம் வாங்கவும். அப்பொழுது தான் சலுகைகள் கிடைக்கும். இதற்காகவே ஆதார் அட்டை அவசியம்." என்கிறது.