
ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையத்தில் தனியார் பால் பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் கடந்த பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது ராமன் என்ற முதியவர் இரவு நேரக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் பாலைக் கொண்டு பால்கோவா உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தயாரித்து வருகிறது.
13 ந் தேதி அதிகாலை ராமன் தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக எதிர்பாராத விதமாக பாய்லர் மிக பயங்கரமான சத்தத்துடன் குண்டு வெடிப்பது போல் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு ஊழியர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.