தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் தமிழக மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பேருந்துகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். அந்த பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள்.
![bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/UHjuO4J0a8uKDQcfGl-yy4WU8x0MN75cvrP8S-Atnf4/1571818472/sites/default/files/inline-images/omni%20bus_1.jpg)
ஏறத்தாழ சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 23 ஆம் தேதி வசூலிக்கப்படுகிற கட்டணத்தை விட, அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக சென்னையிலிருந்து சேலத்திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ? பண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன ? இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.
ஆனால், தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்படாமல் நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கே பதிவு செய்யப்படுவதால் சாலை வரி வருடத்திற்கு ரூபாய் 18 ஆயிரம் தான் செலுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு பேருந்திற்கு சாலை வரியாக ரூபாய் 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சலுகைகளை அனுபவிப்பதற்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உடந்தையாக இருப்பது ஏன் ? வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை தமிழகத்தில் அனுமதிப்பது ஏன் ?
![ks azhagiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/8Yau9LqHsQIFBZcz4ne5o4t8E0grJNjMmDzapZDvrZQ/1571818568/sites/default/files/inline-images/ks%20azhagiri_5.jpg)
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி இத்தகைய ஆம்னி பேருந்துகள் மீது பல்வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இயக்குவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கலாம். அத்தகைய தடை விதிக்கப்படுவதோடு, ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்ற கட்டணத்தையும் நெறிமுறைப்படுத்தலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே, தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.