பொது ஊழியர் என்ற அமைச்சர் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்மீது சட்டபூர்வ குற்ற நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு உத்திரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இவழக்கு மனுவில் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:
ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதால், அதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் 29.09.2001 முதல் ௦1.03.2002 வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார் அதன் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து 28.09.2014 முதல் 22.05.2015 மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியமைச்சராக பதவி வகித்த நிலையில், செல்வி. ஜெயலலிதாவின் இறப்பை தொடர்ந்து 06.12.2016 முதல் தான் ராஜினாமா செய்த நாளான 05.02.2017 வரை மீண்டும் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். 21.08.2017ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்று தற்பொழுது துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் “பொது ஊழியர்” (PUBLIC SERVANT) என்ற விளக்கத்திற்குள் வருகின்ற துணை முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகப் படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்து தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சுப்புராஜ் என்கிற தனது நண்பர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பேரில் அதிக அளவிலான சொத்துக்களை வாங்கியும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தும் உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக தனக்கு கிடைக்கும் சம்பளத்தை விட குறைவான தொகையை தனது வருமானமாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் கூறியுள்ளார். குறைவான வருமானத்தை காட்டிய அதே நேரத்தில் அதைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
தனது குடும்ப பாகப்பிரிவினையின் மூலம் கிடைத்த சொத்துக்கள் குறித்து வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் குறிப்பிடவில்லை. தனது மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 2016 - ஆம் ஆண்டு பொது தேர்தலில் தான் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவுடனான உறுதிமொழி ஆவணத்தில் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவர் முழுமையாக குறிப்பிடவில்லை.
தனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயப்ரதீப் மற்றும் மகள் கவிதாபானு ஆகியோர் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ரூபாய் 200 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். 25 வயது கூட நிரம்பாத அவரது மகன் 3 நிறுவனங்களில் இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
அவரது மகன்கள் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களில் மற்ற இயக்குனர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் இவர்களுக்கு வழங்கப்பட்டுளது. இவரது குடும்ப உறுப்பினர்கள் இயக்குனர்களாக உள்ள பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சொத்துக்களை சட்ட விரோதமாக சேர்க்கும் விதத்திலேயே செயல்பட்டு வருகின்றன.
எஸ்.ஆர்.எஸ். நிறுவனம் என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் ரெட்டி மூலம் சட்ட விரோதமாக பலன் அடைந்த நபர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள் சுமார் நான்கு கோடிரூபாய் சட்ட விரோதமாக பெற்றுள்ளது அவர்களது டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது மகன்கள் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மதிப்பீட்டு வரியில் சலுகை அளிக்கும் விதமாக முதலமைச்சராக இருந்த 2015 ஆம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அதன் மூலம் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக பலன் அடைந்து உள்ளது.
இது சம்பந்தமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரிடம் கடந்த மார்ச் மாதம் அனைத்து விபரங்களும் அடங்கிய புகார் கொடுக்கப்பட்டு, அமைச்சர் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவரது பினாமிகள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், வருமான வரிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் படி குற்ற நடவடிக்கை எடுக்க கோரியிருந்தோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு உத்திரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது .
` இதே போன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை துஷ்பிரயோகப்படுத்தி தனது உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை சட்ட விரோதமாக வழங்கியது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு புகாரளித்தும் அதன் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.