கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் உள்ள மேலபகுதி கிராமத்தில் அமைத்துள்ள வீரணம்பட்டி என்ற ஊரில் காளியம்மன் கோவில் வழிபாட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் வழிபடக்கூடிய வகையில் சமரசம் செய்யப்பட்டு கோவில் பூட்டானது இன்று திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கலந்து கொண்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கலந்துகொண்டார். ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதன் பிறகு அந்த பகுதி மக்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ''ஊர் ஒற்றுமையாக நல்ல அமைதியா இருக்கணும். அனைவரும் சமம். அனைவரும் வழிபடலாம் என்று நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த அமைதியை நிலைநாட்டுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. இனிமேல் இந்த ஊர் நல்ல விஷயத்திற்கு ஒரு பெயர் வாங்கி தர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்கள் ஊர் வளர்ச்சிக்காக ஒன்றரை கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியர் ஆகிய நானே ஒதுக்கி இருக்கிறேன். சின்ன சின்ன நெருடல்களை எல்லாம் விட்டுவிட்டு அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கிற முக்கியமான உரிமையை நானும், எஸ்பி சாரும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அண்ணன் தம்பிக்குள் பேசிக் கொள்வதை போல் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் பெரிய பிரச்சனையாக வளர விடக்கூடாது. ஒற்றுமையாக இருந்தால் ஊருக்கும் பெருமை உங்களுக்கும் நன்மை. தொடர்ந்து இப்படி நடந்து கொள்வீர்களா? விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். சின்ன பசங்க, இளைஞர்களை சரியான வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். சண்டை போடாமல் சந்தோசமாக இருக்க வேண்டும். அடுத்து இந்த ஊரின் பெயர் நல்ல விஷயத்துக்கு தான் பேப்பரில் வர வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மார்க், டாக்டர் ஆனார்கள், ஐஏஎஸ் ஆனார்கள் அப்படித்தான் வீரணம்பட்டி பேர் பேப்பர்ல வர வேண்டும். வருமா செய்வீர்களா? வாழ்த்துக்கள்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.