புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி பிலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு சென்று, பின்பு மாயனூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் மூழ்கி பலியான சோகம் இன்னும் மறையவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கறம்பக்குடி ஒன்றியம் கருக்காக்குறிச்சி தெற்கு தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூடப்பட்டிருந்தது பற்றி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் 150 மாணவ மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர். பொதுமக்களின் புகாரையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறந்தாங்கி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே போல கறம்பக்குடி வட்டாரக் கல்வி அலுவலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பிலிப்பட்டி சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை கடல் பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் கீழ்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது போல இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் என்கின்றனர் கிராம மக்கள்.