கேரளாவில் முழு அடைப்பு காரணமாக மக்களின் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வையொட்டி எதிர்கட்சிகள் சார்பில் நாடு முமுவதும் நடத்தப்பட்டு வரும் பாரத பந்தால் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு பேருந்துகள் ஓடவில்லை மற்றும் ஆட்டோக்கள் தனியார் வாகனங்களும் ஓடாததால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவனந்தபுரம் பேருந்து நிலையம் மற்றும் சிட்டி ரோடுகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாதவாறு அனைத்து பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மழை வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளாத கேரளாவுக்கு முழு அடைப்பை ஏற்படுத்தி வியாபாரிகளுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் மீண்டும் ஓரு கஷ்டத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது என்று பா.ஜ.க மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல் குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இதனால் பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. மேலும் சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமாரியில் கடைகள் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கேரளாவில் முழு அடைப்பு என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மட்டும் குறைந்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பத்மனாதபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் கடைகள் மற்றும் ஒட்டல்கள் முமுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் குறைவாகவே ஓடுகின்றன. மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் காலையில் 12 பஸ்களை மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Published on 10/09/2018 | Edited on 10/09/2018