கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில், 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடியை மேலாண் இயக்குனர் ராகேஷ் குமார் ஏற்றி வைத்தார். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், " 2025-ஆம் ஆண்டிற்குள் என்எல்சி நிறுவனம் தனது சுரங்கத்திலிருந்து பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி வெட்டி எடுத்து அதனை பயன்படுத்தி, மணிக்கு 2 கோடியே 10 லட்சத்து 16 ஆயிரம் யூனிட் மின்சக்தி தயாரிக்க வேண்டும் என்று மிகப்பெரிய இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2 X 660 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தின், இரண்டாம் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐந்தாண்டு காலத்தில் ரூபாய் 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான சுரங்கம், அனல்மின் நிலையம், மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் திட்டங்களை தொடங்க சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
என் எல் சி நிறுவனம் நிலைத்து நிற்கவும், லாபத்தை ஈட்டவும் நமது அனைத்து செயல்பாடுகளிலும் செலவை கட்டுப்படுத்த முழு வீச்சில் ஈடுபடவேண்டும். நெய்வேலி நகரத்தை பசுமை நகரமாக மாற்றும் வகையில் என்எல்சி நிர்வாகம் 'தூய்மை மிக்க நெய்வேலி' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் கழிவுப்பொருட்களை விஞ்ஞான முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பிரித்தெடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறிக் கொள்கிறேன்" என்றார் .
அதேபோல் விளையாட்டுத்துறையில், மாணவ மாணவிகள் பல்வேறு வெற்றிகளை குவிக்க, நிறுவனம் ஊக்குவிக்கும் என்று கூறி, இறுதியாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது அதிகாரத்தில் உள்ள வினைத்திட்பம் அதிகாரத்தில் வழங்கியுள்ள, 666 குரலுடன் உரையை நிறைவு செய்தார்.