இந்த நவீன உலகில் அனைத்தும் இணையமயம் ஆகிவிட்டது. அந்த வகையில், தங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் இருந்தபடியே செல்போனில் ஆர்டர் செய்து டெலிவரி மூலம் பெறும் முறை அதிகரித்துள்ளது. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக சொமேட்டோ இருந்து வருகிறது. இந்த செயலி மூலம், சைவம், அசைவம் உணவுகள் போல் அனைத்தையும் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்தர் கோயல், தலைமை பணியாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு முழுவதும் எந்தவித சம்பளம் கிடையாது என்றும், அந்த நபர் ரூ.20 லட்சம் முன் தொகையாக முன்பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன் தொகையாக செலுத்தப்படும் பணம், பீடிங் இந்தியா (Feeding India) என்ற அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் ஆண்டில் எந்த வித சம்பளமும் வழங்கப்படாது என்றாலும், இரண்டாவது ஆண்டில் இருந்து ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் சம்பளமாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தீபந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், உங்கள் முன் அல்லது நீங்கள் ஈர்க்க விரும்பும் நபர்களுக்கு முன்பாக உங்களை அழகாகக் காட்டக்கூடிய, நல்ல ஊதியம் பெறும் வேலைக்காக அல்லாமல், அது வழங்கும் கற்றல் வாய்ப்புக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நீங்கள் இந்தப் பதவிக்கு வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக உங்களுக்கான கற்றல் திட்டமாக இதை நினைத்துப் பாருங்கள். இந்த பதவிக்கு நாங்கள் கற்பவர்களையே விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு பல விமர்சனங்களை பெற்று வந்தாலும், இந்த பதவிக்கு 24 மணி நேரத்தில் 18,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தீபந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.