என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களை சேர்ந்த 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் முயற்சித்து வருகின்றன. இதனை கண்டித்து 26 கிராம பொதுமக்களும், விவசாயிகளும் கிராமங்களில் கருப்பு கொடியேற்றியும், GOBACKNLC என பதாகைகள் வைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் உழவர்சந்தை முன்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளையும், என்.எல்.சியையும் கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு வேல்முருகன் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "என்.எல்.சி நிறுவனமானது முதல், இரண்டு, விரிவாக்கம் என மூன்று சுரங்கங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
இந்நிலையில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 12,125 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவது மிகவும் கண்டிக்கதக்கது. நிலம் எடுப்பது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட 26 கிராமங்களிலும் பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்கும் போது 80 சதவித மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்நிலங்கையகப்படுத்த கூடாது என்ற பாரளுமன்றம் சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க நினைக்கும், என் .எல்.சி நிர்வாகம் இனிமேல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். அதையும் மீறி மத்திய, மாநில, அரசுகளின், அதிகாரிகள், காவல்துறையினர் என யாராவது நிலங்களை கைய தப்படுத்த கிராமங்களில் நுழைந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.