நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்த நிகழ்வின் போது, அமைச்சர் சீனிவாசனின் செருப்பு மாட்டிக்கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை 'டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா' என கூறியதும் அருகிலிருந்த பழங்குடியின சிறுவன் அவரது செருப்பை அகற்றினான்'.
அமைச்சரின் இந்த செயல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மனித உரிமை மீறல் என பல்வேறு தரப்புகளில் இருந்து அமைச்சருக்கு கண்டனங்கள் குவிந்தன. அதன்பிறகு இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவனை தனது பேரனாக நினைத்துதான் அப்படி செய்யச் சொன்னேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிகழ்வு தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், அமைச்சரின் செருப்பை கழற்றிய பழங்குடியின மாணவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.