நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது கனமழை. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்களில் உள்ள மக்களின் நிலை உதவிகளுக்காக காத்திருக்கும் நிலையாக உள்ளது. ஆனாலும் தன்னார்வ இளைஞர்கள் பல்வேறு குழுக்களை அமைத்து நிவாரணப் பணிகளுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள். ஆனாலும் தன்னார்வ இளைஞர் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு நிவாரணங்கள் கிடைக்கச் செய்து வருகிறார்கள்.
வெளியூர்களில் வேலைக்காக சென்ற நீலகிரி மாவட்ட இளைஞர்கள் திரும்பி வந்து மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை உள்ளூர் இளைஞர்கள் வழிகாட்டி வழங்கி வருகின்றனர். வீடுகளை இழந்தவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இன்னும் சரியான நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஓவேலி அருகில் உள்ள எல்லைமலை கிராமத்தைச் சேர்ந்த சைமுதீன் என்பவர் கடந்த 8 ந் தேதி மண்சரிவில் சிக்கியவர்களை மீட்டு தங்கும் முகாம்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது 50 அடி உயரத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டு புதைந்துள்ளார்.
கடந்த 11 நாட்களாக அவரைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். பொக்கலின் மூலம் மண்ணை தள்ளி தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் 19 ந் தேதி குண்டன்புழா ஆற்றங்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 11 நாட்களுக்கு பிறகு சைமூதீன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது உறவினர்கள் கதறினார்கள். சைமூதீனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.