தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 5- ஆம் தேதி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் வரவுள்ளார்.
தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 325 கோடி செலவில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளது. அதுபோல் திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் மாதம் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்ள இருக்கிறார். அதையொட்டி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள ஒடுக்கம் பகுதியில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உடனிருந்தார்.
அதை தொடர்ந்து முதல்வர் வருவதையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், முன்னாள் மேயர் மருதராஜ், டிஆர்ஓ வேலு, மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.