மோடி தலைமையினான பா.ஜ.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுதும் பலமான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இதன் அளவு அதிகமாகவே இருக்கிறது.
மாணவர்களை வழிமறிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான விவாத அரங்குகள், நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாகவே நடந்துவருகின்றன.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழகக் கவிஞர்கள் 40 பேரின் எதிர்ப்புக் குரலை ’முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார் கவிஞர் நா.வே. அருள்.
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கலை விமர்சகர் இந்திரன், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கத் தெருவிறங்கியிருக்கும் கவிஞர்களையும், அவர்களின் கவிதைகளையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அவர் தன் அணிந்துரையில்...
’கலை எனும் கர்ப்ப கிரகத்துக்குள் அழகியல் ஆராதனைகளுக்கு அனுக்கிரகம் செய்தபடி பீடத்தில் அமர்ந்திருந்த கவிதை, இன்று உண்மை, நேர்மை, நீதி எனும் திரிசூலம் ஏந்தி தெருவில் காவல் உலா வரத் தொடங்கி விட்டது.
குளிர்ந்த மலைக்காடுகளில் பள்ளிக் கூடங்கள் இல்லாததால் தற்குறியாகிப் போனவர்களுடன் சேர்ந்து கொண்டு, கவிதை இன்றைக்குக் வயலை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளைத் துரத்தி துரத்தி வேட்டையாடக் கிளம்பி விட்டது.
கல்வி பணத்தோடு கைகோர்த்துக் கொண்டதால், படிக்க முடியாமல் போனவர்கள் எல்லோரும் அசந்து தூங்கும் இருட்டு விலகாத அதிகாலையில், தெருக் குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களோடு சேர்ந்து கொண்டு கவிதையும் குப்பை அள்ளி நாட்டைச் சுத்தம் செய்கிறது.
கவிதை இன்று கல்வி மறுக்கப்பட்ட விவசாயிகளுடனும், உழைப்பாளிகளுடனும் தோள் மேல் கைகோர்த்து வட்டமாகச் சுழன்று சுழன்று ஆதிவாசி நடனம் ஆடுகிறது.
நான்காவது மாடியில் இருக்கும் தன் அறைக்குள் தனிமையில் தன் மனசுக்குள் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்த கவிதை, இன்று தரைக்கு இறங்கி வந்து கண்ணில் தென்படும் மனிதர்களையெல்லாம் கை காட்டி அழைத்து ஆத்மார்த்தமாகப் பேசத் தொடங்கி விட்டது.
தனது அந்தரங்கமான ஆசைகளையும் கோபங்களையும்கூட அது பச்சையாகப் பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டது..
வாசனைத் தைலம் தெளித்த தன் ஆடம்பர உடைகளைக் கழற்றி எறிந்து, கவிதை தன் உள்ளாடைகளோடு நடுரோட்டில் நின்று உங்களிடம் நியாயம் கேட்கிறது.
நெருப்பு வார்த்தைகளைத் தின்று கொழுத்த உங்கள் முன் வந்து நின்று தன் திறந்த உடம்பின் பலம் காட்டி உங்களைத் தட்டிக் கேட்கிறது கவிதை’ என்றெல்லாம் கவிஞர்களின் எதிர்க்குரலைப் பாராட்டியிருக்கிறார்.
கவிஞர்களின் எதிர்க்குரலை கவிதை நூலாகத் தொகுத்து தந்திருக்கும் கவிஞர் நா.வே.அருள் பாராட்டுக்குரியவர்.