தமிழகத்தில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நேற்று, 'நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரிய வந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள். மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனவும் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழக சட்டப்பேரவை நிகழ்ந்து வரும் நிலையில் பேரவையிலும் இது குறித்து விவாதம் நடத்த திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.