பள்ளிகளைப் போலவே கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு நடத்தப்படு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் தகாத முறையில் நடந்துகொள்வது போன்ற பல்வேறு புகார்கள் காவல்துறையில் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வரும் 7ஆம் தேதி வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் போலவே, கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆன்லைன் வகுப்பு போலவே, கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கும் உடை கட்டுப்பாட்டை இந்தக் குழு பரிந்துரைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவுசெய்வது, புகார் பிரிவு உருவாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. வரும் 11ஆம் தேதிக்குள் அரசிடம் இதுகுறித்த வரைவு அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்க உள்ளது.