பொங்கலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில் சிதம்பரம் பகுதியில் இருந்து பன்னீர் கரும்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை, அகரம் நல்லூர், பழைய நல்லூர், கீழகுண்டல பாடி, ஜெயங்கொண்டம் பட்டினம், நந்திமங்கலம், ஓடகநல்லூர் வீராணம் ஏரிக்கரை உள்ளிட்ட 100 - க்கும் மேற்பட்ட பகுதிகளில் காவிரி தண்ணீரை கொண்டு நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இந்தப் தண்ணீர் மூலம் வளரும் நெல் மற்றும் கரும்பு பயிர்களுக்கு தனி மதிப்பு உண்டு.
கடந்த ஆண்டு சரியான நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் இந்தப் பகுதியில் பன்னீர் கரும்பு சாகுபடி குறைவாக இருந்தது. மேலும் கொஞ்சநஞ்சம் வந்த தண்ணீரை வைத்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கரும்பு திடகாத்திரமாக இல்லை. மிகவும் மெலிந்து இருந்தது. ஆனால் தற்போது காவிரி தண்ணீர் சரியான நேரத்தில் இன்னும் வந்து கொண்டு இருப்பதால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி இந்த ஆண்டு காவரி தண்ணீர் இருப்பதால் கரும்பு அடர்த்தியாக வளர்ந்து உள்ளது. ஒரு கரும்பின் எடையும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு கரும்பின் அளவு இந்த ஆண்டு ஒரு கரும்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பகுதியில் விளைந்த கரும்பினை மொத்த கொள்முதல் செய்ய தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, செஞ்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இந்த பகுதிகளில் குவிந்துள்ளனர். இதனால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்துள்ளது என்றார்.