நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் பகுதியிலிருப்பவர் அந்தோணி. இவர் மனைவி தீபா. இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகனிருக்கிறான்.
இந்த நிலையில் தன் மகன் யோகேசுடன் நேற்று முன்தினம் (21/02/2020) நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் வந்து தங்கியிருக்கிறார் தீபா. அது சமயம் அவளுடன் ஒரு ஆணும் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தபோது அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று (22/02/2020) இரவு தலையில் காயங்களோடு துடித்த 4 வயது மகனை அருகிலுள்ள பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த தீபா, தன் மகன் கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று (23/02/2020) காலை மரணமடைந்திருக்கிறான்.
![NELLAI DISTRICT CHILD INCIDENT POLICE INVESTIGATION](http://image.nakkheeran.in/cdn/farfuture/vzxmTLI_HZw1xbxarh3BiFpCC53UkjP9fK4_AYGf1fo/1582457150/sites/default/files/inline-images/THIRUNELVE444.jpg)
தகவலறிந்த மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு விரைந்தவர், நடந்தவைகளை விசாரித்து வருகிறார். இதனிடையே தகவலறிந்து ஊரிலிருந்து வந்த கணவன் அந்தோணி, அவளுடன் உடனிருந்தவன் தான் அடித்துக் கொன்றிருக்க வேண்டும் என்று சொல்ல, விசாரணை தீவிரமாகியிருக்கிறது.
போலீசார் விசாரணையில் உடனிருந்தவர் சொரிமுத்து என்கிற விபரம் தெரியவந்திருக்கிறது. அவர் மற்றும் தீபா இருவரும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் நிலவரம் தெரியவரும் என்கிறார் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டரான பர்ணபாஸ். முறையற்ற தொடர்பு காரணமாக நடந்த கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாகி இருப்பதோடு தலைமறைவானவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.