பாண்டிச்சேரி பெட்டிட் செமினரி பள்ளியில் மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம் என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாரம்பரிய உணவுகள் பற்றிய அரங்கை கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளரும், மறைந்த நெல் ஜெயராமன் சகோதரர் மகனுமான எஸ்.ராஜு, நெல் ஜெயராமன் மீட்டெடுத்த 174 பாரம்பரிய நெல் ரகங்களில் 150 நெல் ரகங்களை பார்வைக்கு காட்சி படுத்தியிருந்தார்.
இதனை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்து அசந்தனர்.

அழிவில் இருந்த இத்தனை ரகங்களை எப்படி ஒருவரால் மீட்கமுடிந்தது என்று ஆச்சர்யப்பட்டனர். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
பாரம்பரிய அரிசி எங்கு கிடைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை பூச்சிக்கொல்லி மருந்துகள் உரம் போன்றவை இல்லாமல் அதிக மகசூலுடன் லாபகரமாக சாகுபடி செய்வது எப்படி? என்ன முறைகளில் நடவு செய்ய வேண்டும் என ஆசிரியர்களும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்களும் கேட்டறிந்தனர். மேலும் பயிரிடும் முறைகள் மற்றும் அரிசி கிடைக்கும் இடங்களின் முகவரி அளிக்கப்பட்டது.

இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு கேள்விகளை கேட்டதால் இது போன்ற இயற்கை விவசாயம் குறித்த அரங்குகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொண்டு சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜு தெரிவித்தார்.

விழாவில் புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், இஸ்ரோ முன்னாள் இணை இயக்குநர் ரகுநாத் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி, கிரியேட் கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.