அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று (16/06/2021) இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியால் ஒற்றைத் தலைமைப் பிரச்சனை பூதாகரமானது. ஒற்றைத் தலைமை பிரச்சனையை உருவாக்கியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரைக் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்" என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது தம்பிதுரை ஓ.பன்னீர்செல்வதை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.
இதனிடையே, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக முயற்சி செய்து வருவதாகவும், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நாளை மாவட்டச் செயலாளர்களுடன் தனியாக ஆலோசிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அ.தி.மு.க.வின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடி தான் என்று ஓ.பி.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திர மோடி என்பதை அ.தி.மு.க.தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.