"அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளைத் தடைசெய்யக்கூடாது", என வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 54 கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடந்த பத்தாம் தேதி தடைசெய்யப்பட்ட சுருக்குவலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த நாகை கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், வெள்ளபள்ளம் சிறுதொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலைகளை அனுமதிக்கக்கூடாது என ஆட்சியரிடம் மனுகொடுத்ததோடு வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்ளிட்ட10 கிராம பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுருக்குமடி வலைகளைக் கொண்டு, கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு மனுநீதி முகாம் நாளான இன்று (16/03/2020) பழையாறு முதல் செருதூர் வரை உள்ள 54 மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட வந்த மீனவர்களையும், மீனவப் பெண்களையும் போலீசார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தியதால் மீனவ பெண்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் உள்ளே புகுந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள்," தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அலுவலக வாசலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீனவப் பெண்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இறுதியில் ,"உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசாரும், அதிகாரிகளும் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.