ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என நட்டா தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை தமிழகம் வந்தடைந்தார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா. தமிழகம் வந்தடைந்த நட்டாவை பாஜக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்திற்குத் திரண்டு சென்று வரவேற்றனர். அதன்பின்னர் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பாஜகவின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் நட்டா. அப்போது தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த நட்டா, தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு வளமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, அது 'பக்தி' பிரதேசமாகும். மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களால் மத உணர்வுகள் பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் இது. உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான்; அதனால்தான் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகிறார்கள். நாடு முழுவதும் முன்னோக்கிச் செல்வதை பிரதமர் மோடி பார்க்க விரும்பினார். அதே சமயம், வளர்ச்சியைப் பொருத்தவரை தமிழகம் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை மேற்கொள்வதை அவர் உறுதி செய்துள்ளார். இரண்டு திராவிட கட்சிகளின் போட்டியால் தமிழகத்தில் பாஜக வளர முடியவில்லை. ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது, அவரது திறமையை வெளிக்காட்டுகிறது, அது எனக்கே ஆச்சரியமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.