நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை மர்மமாகவே இந்த வழக்கு உள்ளது.
இந்த நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மனோஜ் சாமிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்ட நிலையில், கனகராஜ் சாலை விபத்தில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் வாளையார் மனோஜ், சயான், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் என 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் கோவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி இந்த வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான் ஆஜராகி 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். சயான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனோஜ் சாமியை விசாரிக்க இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.