மத்திய பா.ஜ.க அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதாவுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, அந்த மசோதா கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பேசினர்.
அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்ப மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரைத்தார்.
அதன்படி, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 27 மக்களவை உறுப்பினர்கள் என 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 39 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பா.ஜ.க எம்.பி பிபி சவுத்ரி தலைவராக உள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். பா.ஜ.க எம்.பி சவுத்ரி தலைமையிலான கூட்டுக்குழுவில் திமுக எம்.பி வில்சன், செல்வகணபதி, காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்முறையாக எம்.பியாக பதவியேற்ற பிரியங்கா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று (08-01-25) கூடுகிறது. மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு சட்டத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.